திருவண்ணாமலை: 03.01.2026
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும்,
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
இதனையொட்டி, நேற்று இரவு சிவகாம சுந்தரி சமேத நடராஜ பெருமான், கோயிலின் 5-ஆம் பிரகாரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார்,உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக – ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கோயில் சிவாச்சாரியார்கள் பல்வேறு சிறப்பு பூஜைகளை செய்து ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியின் மீது தீபத் திருவிழாவின் போது ஏற்றப்பட்ட தீப கொப்பரையிலிருந்து பெறப்பட்ட தீப மையானது. நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திலகமாக நெற்றியில் இடப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் 5-ஆம் பிரகாரத்தில் வலம் வந்து, திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
இந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து இதை பத்மம் யூடியூப் சேனலில் வீடியோ காட்சியாக காணலாம்
https://youtu.be/ZGJrwjnvzSM?si=SWBAcu-o0qms3DYU




