preloader

திருப்பாவை பாடல் 23 – 30

திருப்பாவை பாடல் 23 – 30

திருப்பாவை பாடல் 23 – 30

மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்

சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து,

வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்துதறி,

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்,

போதருமா போலே நீ பூவைப்பூவண்ணா!

உன் கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக்

கோப்புடைய சீரியசிங் காசனத்திருந்து

யாம் வந்த காரியம் ஆராய்ந்தருளேலோர் எம் பாவாய். (23)

அன்று இவ்வுலகம் அளந்தாய்! அடி போற்றி,

சென்றங்குத் தென் இலங்கை செற்றாய்! திறல் போற்றி,

பொன்றச் சகடம் உதைத்தாய்! புகழ்போற்றி,

கன்று குணிலா எறிந்தாய்! கழல் போற்றி,

குன்று குடையா எடுத்தாய்! குணம் போற்றி,

வென்று பகைகெடுக்கும் நின் கையில் வேல் போற்றி,

என்றென்று ன் சேவகமே ஏத்திப் பறைகொள்வான்

இன்று யாம் வந்தோம், இரங்கேலோர் எம் பாவாய். (24)

ஒருத்தி மகனாய்ப் பிறந்து

ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்,

தரிக்கிலான் ஆகி த் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்

நெருப்பென்ன நின்ற நெடுமாலே!

உன்னை அருத்தித்து வந்தோம்; பறைதருதி யாகில்

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம் பாவாய். (25)

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன

பாலன்ன வண்ணத்துள் பாஞ்சசன்னியமே

போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே,

சாலப் பெரும் பறையே, பல்லாண்டிசைப்பாரே,

கோல விளக்கே, கொடியே, விதானமே,

ஆலின் இலையாய்! அருளேலோர் எம் பாவாய். (26)

கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

உன் தன்னை பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்;

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்,

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே

பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்;

ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு

மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்

கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம் பாவாய். (27)

கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்;

அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து

உன் தன்னைப் பிறவிப் பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்;

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா!

உன்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

அறியாத பிள்ளைகளோம் அன்பினால்

உன்தன்னைச் சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே,

இறைவா, நீ தாராய் பறை ஏலோர் எம் பாவாய். (28)

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்;

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்தில் பிறந்து

நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

உன்தன்னோடு உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட் செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம் பாவாய். (29)

வங்கக் கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறை கொண்ட ஆற்றை, அணி புதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்றின்புறுவர் எம் பாவாய். (30)